தப்பிச் செல்லும் மக்களை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் படை : பீரங்கிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள்

காசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய பீரங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகள் உட்பட பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 காசா நகரில் உள்ள அல் ஷிபா வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான நோயாளர்களுடன் இடம்பெயர்ந்த பலரும் தஞ்சமடைந்துள்ளதால் பாரிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரிலுள்ள அல் ஷிபா மருத்துவ கட்டடத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மிகப் பெரிய வசதிகளைக் கொண்ட அல் குத்ஸ்சிற்கு அருகே வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக செஞ்சிலுவை; சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அல் ஷிபா வைத்தியசாலைக்கு அருகே தமது படையினர் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

அத்துடன் காசா மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாரிய ஊடுருவல்களை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ளனர்.

 இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த காசா பாடசாலை மீதும் இஸ்ரேலிய ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தெற்கு காசாவை நோக்கி பிரதான சாலையில் தப்பிச் செல்லும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வீதி வழியாக எடுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.