இஸ்ரேல் வெற்றிக்கு ஒரு படி தொலைவில் இருக்கின்றோம் : பெஞ்சமின்



காசா போருக்கு அரை ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் வெற்றிக்கு ஒரு படி தொலைவில் இருப்பதாக தெரித்துள்ளார்.

இந்தப் போருக்கு எதிராக இஸ்ரேல் சர்வதேச அளவில் அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதோடு குறிப்பாக இஸ்ரேலின் வான் தாக்குதலில் தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட மேற்கத்திய உலகிலும் கடும் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது.


மறுபுறம் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள்ளும் கடும் எதிர்ப்பை சந்திப்பதோடு அந்த அரசுக்கு எதிராக டெல் அவிவில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ‘உடன்படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது’ என்று தனது அமைச்சரவைக்கு கூறிய நெதன்யாகு, ‘பணயக்கைதிகள் திரும்பாத வரை போர் நிறுத்தம் இல்லை’ என்றார்.

எனினும் கெய்ரோவில் இடம்பெறும் புதிய சுற்று காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘ஆக்கிரமிப்பாளர்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, கெய்ரோ பேச்சுவார்த்தைகளில் புதிதாக எதுவும் இல்லை’ என்று அந்த ஹமாஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு கூறினார்.

முன்னதாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக எகிப்து மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசுக்கு தொடர்புடைய அல் கஹரா செய்தித் தொலைக்காட்சி குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த சனிக்கிழமை கெய்ரோ சென்றடைந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது பிரதிநிதிகளையும் கெய்ரோவுக்கு அனுப்பியது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது பிரதான நிபந்தனைகளில் உள்ள முரண்பாட்டை தீர்க்க தவறியுள்ளன.


இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் நிபந்தனை விதிக்கும் அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி எந்த உறுதியையும் வழங்காத இஸ்ரேல், தமது சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக உடன்பாடு ஒன்றை எட்ட முயற்சிக்கிறது.