பலஸ்தீன மக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை வாங்கியுள்ள இஸ்ரேல்


காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.


இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது.

இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.


இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன.