இஸ்ரேலை சர்வதேசம் திரும்பிப் பார்க்காது: பராக் ஒபாமா விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் மோதல்களில் மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் நேற்று(23) இஸ்ரேல் மற்றும் காசா குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஹமாஸிற்கு எதிரான போரில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகளான காசாவிற்கான உணவு மற்றும் தண்ணீரைத் துண்டிப்பது போன்றது, பலஸ்தீனிய மனப்பான்மையை தலைமுறைகளாக கடினப்படுத்தலாம் என்றும் இஸ்ரேலுக்கான சர்வதேச ஆதரவு பலவீனம் அடையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அத்தோடு, அவர் அதிபராக இருந்தபோது, காசாவில் பலஸ்தீனிய ஹமாஸுடனான மோதல்களின் தொடக்கத்தில் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஒபாமா அடிக்கடி ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.