இந்தியாவுக்கு சாதகமாக மாறிய இஸ்ரேல் மோதல்

இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சினை காரணமாக இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புக்கள் தமது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் தற்போது இயங்கி வரும் டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை இந்தியாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சினை மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இன்டெல், மைக்ரோசொப்ட், கூகுள் போன்ற சுமார் 500க்கும் அதிகமான MNC நிறுவனங்கள் அலுவலகங்களை வைத்துள்ளன.

அமெரிக்க சிலிக்கன் வேலி-க்கு அடுத்தாக அதிக மதிப்புடைய தொழில்நுட்பச் சந்தையாக இஸ்ரேல் பார்க்கப்படுகிறது.

பல தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் சேவைகள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சுதாரித்துக்கொண்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இஸ்ரேல் நிறுவனங்களை கைப்பற்றி அலுவலகத்தையும், வர்த்தகத்தையும் அந்நாட்டில் தொடங்கின.

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சினை காரணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு வர்த்தகத்தை மாற்றி, ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுக்கும் பட்சத்தில், இந்தியப் பொருளாதாரம் மேலும் செழிப்புறும் என துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.