ஹமாஸ் மீதான போரை நிறுத்த விருப்பம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரம்லான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்துவரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் சுமுக முடிவு எட்டப்பட்டால் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு மற்றும் ஆறு வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவை நிறைவேறும்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் திகதி ரமலான் மாதம் தொடங்கவுள்ளது.

இதனடிப்படையில் திங்கட்கிழமை என்பிசி செய்தி நேர்காணலில் பைடன் தெரிவிக்கையில் “ரம்லான் நெருங்குகிறது ஆகையால் பிணைக்கைதிகளை வெளியே கொண்டுவர எங்களுக்கு நேரம் தரும் பொருட்டு இஸ்ரேலியர்கள் இந்த மாதத்தில் எந்த (போர்) நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோமென ஒப்புக்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.