பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் பெறாத நாடுகளால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மான 15 அங்கத்துவ நாடுகளில் 14 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை போர் நிறுத்தம் ஒன்றுக்கான நகல் தீர்மானங்கள் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வந்த அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை (25) நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டது.

இதனை அடுத்து காசா போரை ஒட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்தப் பயணத்தை அதிரடியாக ரத்துச் செய்துள்ளார்.

அமெரிக்கா தனது கொள்கையை கைவிட்டிருப்பதாக நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அமெரிக்கா போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் மூன்று தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. மேலும் இரு தீர்மானங்கள் மீது ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தின.


இந்நிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில் ரமழானில் எஞ்சிய இரண்டு வாரங்களிலும் உடன் போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தவும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘இந்த தீர்மானத்தின் மூலம் எமது பணயக்கைதிகளை விடுவிக்காது போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது. அது போர் முயற்சி மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி இரண்டுக்கும் பாதகமாக அமையும்’ என்று நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் பின்னணியில் இந்த வாரத்தில் இடம்பெறவிருந்த இஸ்ரேலிய தூதுக்குழுவின் அமெரிக்க விஜயம் இடம்பெறாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தூதுக்குழுவின் அமெரிக்க விஜயத்தில் காசாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் படை நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

ரபா மீதான படை நடவடிக்கை அதிக பொதுமக்களை பலிகொள்ளும் என்றும் ஹமாஸை தோற்கடிப்பதற்கான வழி அதுவல்ல என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் பகிரங்கமாக கூறியிருந்தார்.