காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன.
காசா போர் நேற்றுடன் 8 ஆவது மாதத்தை எட்டியதோடு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு இணங்குவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அந்தப் போர் நிறுத்த விதிகள் தமது கோரிக்கையை பூர்த்தி செய்வதாக இல்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் பொதுமக்கள் நிரம்பி வழியும் ரபா தொடர்பில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்திருக்கும் சூழலில், அங்கு பல இடங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ரபாவில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
குறிப்பாக அங்குள்ள வீடுகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,789 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 78,204 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.