லெபனானை தரை வழியாக தாக்கத் தொடங்கிய இஸ்ரேல்! - 1000 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலையும் தொடங்கியுள்ளதால் உயிர்பலி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடந்து வந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனான் எல்லையில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வடக்கில் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் சிலர் பலியாகினர்.

 இதனால் வடக்கு பிராந்தியங்களில் இருந்து மக்களை வெளியேற்றிய இஸ்ரேல் தற்போது லெபனான் எல்லைப்பகுதிகளில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது ‘ஆபரேஷன் நார்தன் ஏரோவ்ஸ் (Operation Northern Arrows)’ என்ற தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. 

இதுவரை லெபனான் மீது வான்வழி மற்றும் தரைவழியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95 பேர் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.