வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் செய்து வருகின்றன.
தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் தொடரும் நிலையில் அங்கு மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் வழக்கு மற்றும் தெற்கு முனையில் சம காலத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது அங்கு புதிதாக ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றத்திற்கு காரணமாகியுள்ளது. மறுபுறும் எல்லைக் கடவைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் உதவிகள் வருவதும் நிறுத்தப்பட்டு பஞ்சம் தீவிரம் அடையும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேறிய பலஸ்தீனர்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி குடியிருப்புகள் மற்றும் அருகில் இருக்கும் சந்தைப் பகுதியின் கடைகளை தரைமட்டமாக்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
இங்குள்ள ஹமாஸ் அமைப்பை ஒழித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் கூறியிருந்த நிலையிலேயே படைகளை அங்கு மீண்டும் அனுப்பியுள்ளது.
ஜபலியா வீதிகள் மற்றும் இடிபாடுகளில் பல டஜன் உடல்கள் சிதறிக்கிடப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசா சுகாதார நிர்வாகம் மற்றும் சிவில் அவசர சேவை பிரிவு, மீட்புக் குழுக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியது.