இஸ்ரேல் இராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்றுள்ள இயல் சமீர் ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என அவர் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவியில் தொடர்ந்தும் இருந்து வந்தார்.
அதேவேளை, மார்ச் 5ம் திகதியுடன் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவதாக ஹர்சி ஹலிவி தெரிவித்தார். இதையடுத்து, புதிய இராணுவ தளபதியை தெரிவுசெய்ய இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இயல் சமீர் நேற்று பதவியேற்றுக்கொண்டுள்ளா
பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய இராணுவ தளபதி இயல் சமீர், ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன். ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்' என தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்கா மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், அமெரிக்கா மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியான பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லெவிட் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்க மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, உலக அளவில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை. இது அமெரிக்க மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நல்லெண்ண முயற்சி என்றும் லெவிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.