நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்பும் மற்றும் நாட்டை வன்முறைக்கு தள்ளும் நிலைமையை உருவாக்கக் கூடிய
நபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்பிலும் அவருடன் தொடர்புடையவர்களின் வலையமைப்பு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்தஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அடிப்படைவாதத்தை பரப்பும், வன்முறைக்கு தள்ளப்படக் கூடிய தன்மையுள்ள ஒருவர் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பிரதேசம் தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
ஆனால் அவர் அவ்விடத்தில் இருந்து மாத்திரம் அதனை செய்வதாக நாங்கள் நினைக்கவில்லை. அதனுடன் தொடர்புடைய வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றது.
இவ்வாறான சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். முழு நாட்டின் மக்ககளினதும் பாதுகாப்புக்காகவே இதனை செய்கின்றோம்.
அனர்த்தமொன்று நடப்பதற்கு முன்னர் அதனை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும். ஏதேனும் நடந்த பின்னர்தகவல்கள் கிடைத்திருந்தன ஆனால் ஒன்றும் செய்யவில்லை என்று கூற வேண்டிய தேவையிருக்காது.
எவ்வாறாயினும் கிடைக்கும் சிறிய தகவல்களாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன. அந்த விசாரணையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று உறுதியானால் அந்த சந்தேகநபர் விடுவிக்கப்படுவார். இல்லையென்றால் அதன் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடக்கும்.
இதுபோன்றே அண்மையில் சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது உடனடியாக விசாரணை நடத்திதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம்.
இதனால் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இனம், மதம் மற்றும் பிரதேசம் தொடர்பான விடயங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம். வன்முறை மற்றும் பயங்கரவாதம் எந்த வழியிலும் வரலாம்.
இதற்காக எவரையாவது கைது செய்து விசாரணை நடத்தினால் அந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இடமளியுங்கள். எவ்வாறாயினும் அரசாங்கம் சகல இனங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும்.
எவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்கமாட்டோம். அத்துடன் மீண்டும் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்வை பாதிப்புக்கு உள்ளாக இடமளிக்க மாட்டோம் என்றார்