இலங்கை - இந்தியவுக்கு இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார்ந்த ஒத்துழைப்புகள் இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள், செயலமர்வுகள் போன்ற திட்டங்கள் ஊடாக வலுப்பெற்றுள்ளன.
இதனை தவிர வருடத்திற்கு இலங்கை பாதுகாப்பு படைகளின் 750பேருக்கு சிறப்பு பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கின்றன.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இருநாடுகளின் தேசிய கொள்கைகளுக்கோ அல்லது சட்ட கட்டமைப்பிற்கோ எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது.
இலங்கை - இந்திய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின்போது, இருதரப்பு தேசிய மற்றும் இராணுவ சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடணம் என்பவற்றை பாதுகாப்பதில் இருநாடுகளும் உறுதியுடன் உள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 5 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்குமென முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று மாத முன் அறிவிப்பு மூலம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது என்றார்