டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? : பேராசிரியர் சமரஜீவ விளக்கம்


டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை அவர்கள் போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101கதா’ கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்த அவர்,

 யுத்த காலத்திலும் 4 கையடக்க தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களும் 3 நிலையான தொலைபேசி இணைப்பு நிறுவனங்களும் காணப்பட்டன.

 அவற்றில் டயலொக் நிறுனத்தில் மாத்திரமே இலங்கையர் ஒருவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காணப்பட்டார். இருப்பினும் அந்நிறுவனம் முழுமையாக மலேசியாவிற்கு சொந்தமாக இருந்தது. இவ்வாறிருக்க சிலர் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மந்திரம் போல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை அரசாங்கம் முழுமையாக கொண்டிருந்த போது கொழும்பு லோட்டஸ் வீதியில் காணப்பட்ட தலைமையகத்திலிருந்தே அனைத்து சர்வதேச அழைப்புக்களும் பரிமாற்றப்பட்டன.

அந்த செயன்முறைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இலங்கை சர்வதேச நாடுகளிடத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும்.

வயர் மற்றும் மென்பொருட்கள் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் முழு வலையமைப்பும் முடங்கிவிடும். மென்பொருள் கட்டமைப்புக்கு மாற்று முறைமைகளும் காணப்படவில்லை.

டெலிகொம் நிறுவனத்தை அரசாங்கம் நிர்வகித்த போது கூட தேசிய பாதுகாப்பிற்கு இவ்வாறான சவால் காணப்பட்டது. அக்காலத்தில் புலிகள் அமைப்பினால் இரு தடவைகள் தாக்குலும் மேற்கொள்ளப்பட்டது.

 தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் மாற்று முறைமைகளை பின்பற்றுமாறு ஜப்பான் நிறுவனத்திடம் நாம் அறிவுறுத்தியிருந்தோம். அவர்களும் உடனடியாக புதிய முதலீடுகளுடன் புதிய இடமொன்றில் மாற்று முறைமையொன்றை நிறுவினர். டெலிகொம் நிறுவனம் முழுமையாக அரசாங்கத்தின் வசமாக காணப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் நிறுவனத்தின் பாதுகாப்பை பொருட்படுத்தவில்லை.

 இருப்பினும் நாம் பாதுகாப்பற்ற இடம் எதுவென அறிந்துகொண்டதன் காரணமாகவே தகவல்களை சேமிக்கும் கட்டமைப்பொன்றை மாற்று இடத்தில் நிறுவினோம்.

மேலும் அரசியல்வாதிகளின் சகோதரர்கள் உறவினர்களும் அரச நிறுவனங்களில் நியமிக்கப்படுகிறார்கள். அதன் பிறகுதான் முறைகேடு நடக்கிறது என அவர் கூறினார்.