போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை


மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளதாக ஐ.நா சபைக்கான ஈரானின் விசேட வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவோ இஸ்ரேல் எதிர்வினையாற்ற முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

எம் மீது தாக்குதல் நடத்தினால் பல மடங்காக திருப்பியடிப்போம் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் எங்கள் பதில் இன்றிரவு இராணுவ நடவடிக்கையை விட பெரியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கினால், அமெரிக்காவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது வலிந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான பதிலடித் தாக்குதல்களை நடத்துவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு அறிவித்ததாக வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.