தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய மஹர நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் பத்து சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவர மண்டிய, கிரிபத்கொட, கிரிலாவல, நீர்கொழும்பு, கம்பஹா, களனி மற்றும் வத்தளை உள்ளிட்ட பத்து பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்றினுள், பாதாள உலகத் தலைவர் கணே முல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்படும் இஷாரா சேவ்வந்தியைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுமார் இருநூறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் பற்றிய எந்த தடயமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மார்ச் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதுடன், பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட திகதியான பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் இஷார செவ்வந்தி காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.