இஸ்ரேல் மீது 3 நாட்களுக்கு இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்


இஸ்ரேலுக்கு  எதிராக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இணையதள தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரான்  எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, ஈரானின் ஜெருசலேம் தினம் நாளை (05) கொண்டாடப்படவுள்ளது, இந்த நாளில், #OpJerusalem  ஓபி ஜெருசலேம் என்ற ஹேஷ்டக்கின் கீழ் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, எதிர்வரும் 7-ஆம் திகதி #OpIsrael  ஓபிஸ்ரேல் என்ற ஹேஷ்டக் பெயரிலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அந்தவகையில் நாளை முதல் 07ஆம் திகதி வரை தொடர்ந்து 03 நாட்களுக்கு இணையதள தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது.

 
இஸ்ரேல் அரசுக்கு எதிராக, இந்த நாட்களில் இணையத்தள தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து மக்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் ஈரானின் ஜெருசலேம் தினம் கொண்டாடப்படுகிறது.


அன்றைய நாளில், இணையதளத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்த கூடிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதன்படி, வலைதளங்கள் திருடப்படுதல், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் வழியே போலியான செய்திகளை பரப்புதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் தனிநபர்களின் கணினிகளில் வைரஸ் பதிவிறக்க தாக்குதல் ஏற்படுத்துவது, வங்கி விவரங்களை திருடுவது அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை திருடுவது போன்ற திட்டமிட்ட தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகிறது.

 
மேலும், சமூக வலைதள இணைப்புகளை திருடுதல், நிறுவனங்களின் தகவல்களில் ஊடுருவுதல், தகவல்களை கசிய விடுதல், தாக்குதல்களை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகளை பரப்பி, பகிர்தல் போன்ற தேவையற்ற செயல்களும் ஒவ்வோர் ஆண்டும் இந்த காலகட்டத்தில் நடைபெறும்.

 
இதனை முன்னிட்டு இஸ்ரேல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதில், இஸ்ரேல் அமைப்புகள் மட்டுமின்றி, தனிநபர் மற்றும் பொதுமக்கள் என பலரின் வலைதளங்கள், வலையமைப்புக்கள் போன்றவை இலக்குகளாக கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும், பொய்யான செய்திகள் பரவ கூடும் என இயக்குநரகம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற தாக்குதல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதனாலேயே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.