ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது.இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இதனால், சர்வதேச விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.8 மாதங்கள் வரையில் நீடித்த இந்த ஊரடங்கை தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.எனினும், கொரோனா தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.இதற்கமைய 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.