சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியின் போது மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும், அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. எனவே அவரை பதவி நீக்கி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2018 இல் மே தினக் கூட்டங்களை நடத்தியவர்கள் தேசிய சொத்துக்களை விற்பதற்கு இடமளிக்க முடியாது என கூறியிருந்தனர். ஆனால், இன்று தேசிய சொத்துக்களை விற்பதற்கான யோசனைக்கு ஆதரவாக கைகளை உயர்த்தியுள்ளனர்.
ஆகவே சுதந்திர கட்சி ஒருபோதும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காது. இதே கொள்கையையே நல்லாட்சியின் போது மைத்திரிபால சிறிசேன பின்பற்றினார்.
அதற்கமைய அவர் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும், அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. இதன் காரணமாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சில சர்வதேச சக்திகள் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான சதித்திட்டங்களை தீட்டின.
இவ்வாறு இடம்பெற்ற சதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல். ஆனால் இன்று இதனை திசை திருப்பி அவரை சிறையிலடைக்க சிலர் முயற்சிக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            