ஆப்கானிஸ்தானுக்கு 2000 டன் கோதுமை அனுப்பிய இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 8 ஆயிரம் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் கோதுமையை அங்கு விநியோகிப்பதில், ஐ.நாவின் உலக உணவு அமைப்பு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்திய அரசு 50 ஆயிரம் டன் கோதுமையை அளிக்க தீர்மானித்திருந்தது.இதற்காக பாகிஸ்தான் வழித்தடத்தைப் பயன்படுத்த அந்த நாட்டிடம் இந்தியா அனுமதி கோரியிருந்தது. இதனையடுத்து  இதுவரை 4 கட்டங்களாக பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை அனுப்பப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.