இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி



இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளதே தவிர, யுத்தத்தை கொடுக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

 இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
 
பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை (புத்த மதம் துறவி) கொடுத்துள்ளோம், யுத்தத்தை (போர்) கொடுக்கவில்லை.
இந்தியா எப்போதும் அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது. எனது ஆஸ்திரிய பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. 41 ஆண்டுகால காத்திருப்பு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியால் நிறைவுக்கு வந்துள்ளது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் 75 ஆண்டுகால நட்பை கொண்டாடுகிறது என தெரிவித்தார்.

இதேநேரம், வியன்னாவில் வந்தே மாதரம் பாடலை இசையமைத்து அந்நாட்டு கலைஞர்கள் மோடி முன்னிலையில் பாடிக்காட்டினர்.

இந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.