இந்தியாவா? சீனாவா? எது முக்கியம் : இந்திய தொலைகாட்சியின் கேள்விக்கு பதிலளித்த நாமல்

 
 

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த முதலீட்டினால் இலங்கை மக்கள் பெரிதும் பயனடைவர்' என்ற கோணத்திலேயே அணுகவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்திய பிரபல தொலைக்காட்சி சேவையான 'ஃபர்ஸ்ட் போஸ்ட்' இனால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று தெற்காசிய நாடுகளின் சமகால நகர்வுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
 
சமகாலத்தில் உலகநாடுகள் பலவும் வர்த்தகத்துறை சார்ந்த பொதுக்கட்டமைப்புக்களிலிருந்து விலகி வருகின்றன.
 அதற்கு சமாந்தரமாக அரசாங்கங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மேலோங்கியும் வருகின்றன.
 தற்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றிருக்கும் பின்னணியில் இலங்கையும், இந்தியாவும் இணைந்து பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தலாம்  
 
அதேபோன்று இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் காரணங்களால் சில முக்கிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் காலந்தாழ்த்தப்பட்டன.
அதன்விளைவாக 2022 இல் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி பின்னர் பொருளாதார நெருக்கடியாக விரிவடைந்தது.
 இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகள் தமக்கிடையில் வலுவான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியம் என்றார்.  

மேலும் இலங்கையில் இந்திய மற்றும் சீன முதலீடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ,


இவ்விடயத்தில் 'எந்த நாடு' என்ற கோணத்தில் நோக்குவதை விட, எந்த முதலீட்டினால் இலங்கை மக்கள் பெரிதும் பயனடைவர் என்ற கோணத்திலேயே நோக்கவேண்டும்  
 
'இலங்கையில் சீனா அதிக முதலீடுகளைச் செய்திருக்கிறது. அதேவேளை கடந்த 10 வருடகாலத்தில் இந்தியாவே இலங்கையில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது.
எமது நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்களாவர். எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில், அதனை இலங்கை எவ்வாறு அணுகுகிறது என்பதே முக்கியமானதாகும்' எனவும் நாமல் ராஜபக்ஷ விளக்கமளித்தார்.