மோடிக்கு கனடாவில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: மீண்டும் அதிகரிக்கும் முறுகல்

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான சாலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் மற்றும் உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, இந்திய உள்துறை அமைச்சகம், இசட் பிரிவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 சீக்கிய பிரிவினைவாத அமப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவிற்கு வெளியே, இந்தியாவில் இருந்து தனி மாநிலம் உருவாக்கப்படவேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்று நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, செவ்வாய்க்கிழமையன்று இந்த சுவரொட்டிகளை காலிஸ்தான் பிரிவினைக் குழுவான SFJயின் உறுப்பினர்கள் ஒட்டியுள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னராகவே கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளான மணீஷ் மற்றும் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அதேவேளை, இந்தியாவுக்கான கனடா உயர் ஸ்தானிகரான Cameron MacKayக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் இந்திய பிரதமர் முதலானோரை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ட்ரூடோ அரசு அந்த சுவரொட்டிகளை உடனே அகற்றவேண்டும் என்றும், இந்திய பிரதமர் முதலானோருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.