உலக பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் இந்தியா! ஐ.எம்.எப் அறிவிப்பு |

உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான (2023) ஆண்டறிக்கை நேற்று முன் தினம் (18) வெளியிடப்பட்ட போதே இந்த விடயம் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

"நிகழாண்டில் உலகில் மிக வேகமாக வளா்ந்து வரும் நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருப்பதற்கு, கவனமாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார கொள்கைகளே காரணம்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டெழுந்து, உலக பொருளாதார வளா்ச்சியில் முக்கிய சக்தியாக இந்தியா மாறியுள்ளது.

கடந்த 2022-2023 நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் ஏற்றம் இறக்கத்துடன் இருந்தாலும் தற்போது அது நிலையாக காணப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்தியா மேற்கொண்ட சீா்திருத்தங்கள் மூலமாகவே இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வருகிறது.

தற்போது இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலைமையும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை குறைந்திருந்தாலும், அரசுக்கான கடன் சுமை அதிகமாகவே உள்ளது, எதிா்பாராத நிதிப் பிரச்னைகளை எதிா்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் இந்தியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அண்மையில் இடம்பெற்ற ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தபோது, பல்துறை சாா்ந்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தலில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தியமையானது, பிற நாடுகளுக்கும் உதாரணமாக இருந்தது."என கூறியுள்ளது.

மேலும், இந்தியா விரைவான வளா்ச்சியை அடைந்து வருவதாகவும், பிற நாடுகளின் வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது, உலக பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்களிப்பாளா்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது எனவும் நிகழாண்டுக்கான உலக வளா்ச்சியில் இந்தியாவின் பங்கு 16 சதவீதத்துக்கும் அதிகமாக காணப்படுகிறது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய பிரதிநிதிக் குழுவைச் சோ்ந்த நட்டா செளயீரி குறிப்பிட்டிருந்தார்.

அதுமாத்திரமன்றி அதிக எண்ணிக்கையிலான இளைஞா்களைக் கொண்டுள்ள இந்தியா, கல்வி, திறன் வளா்ப்பு, பணிகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான சீா்திருத்தங்கள் மூலம் அந்த ஆற்றலைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.