ஒன்றாக கை கோர்த்த இந்தியா மற்றும் சீனா - அதிர்ந்தது அமெரிக்கா; ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்!


உக்ரைனின் 4 மாகாணங்களை தமது நாட்டுடன் இணைக்கும் ரஷ்யாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திலிருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விலகியுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா, தற்போது வரை இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைனும் விட்டுக்கொடுக்காது நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.

சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. அத்துடன் மக்கள் வாழும் நிலையை பல நகரங்கள் இழந்துள்ளன.

இதேவேளை பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் ரஷ்யாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது.

7 மாதங்கள் தொடர் தாக்குதல்களை நடத்திய பிறகும் உக்ரைனை முழுமையாக ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் தாக்குபிடித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் டொனெட்ஸ், லுஹான்ஸ், கெர்சன், ஜபொரிஸ்யா ஆகிய 4 மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்க முடிவு செய்த விளாடிமிர் புடின் இதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

ரஷ்யாவின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

"ஒரு நாடு பிற நாட்டை அச்சுறுத்தியோ அல்லது தங்களின் பலத்தை பயன்படுத்தியோ தங்களோடு இணைத்துக்கொள்வது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இதனை மக்களின் விருப்பமாக ஏற்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரஷ்யாவின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்தன.

அதன் போது, ரஷ்யா தனது படைகளை மீளப்பெற வேண்டும் என்றும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா செய்த மாற்றங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, அல்பேனியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 10 நாடுகள் வாக்களித்தன.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரேசில், கபான் ஆகிய நாடுகள் விலகுவதாக அறிவித்தன. உக்ரைனில் நடந்துவரும் சம்பவங்கள் வருத்தம் தருவதாகவும், உயிர்களை எடுப்பது எதற்கும் தீர்வு கிடையாது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.