இந்தியாவின் இரும்புச் சுவர் - ஈழத்தின் சுதந்திரம்..! டில்லியில் இடித்துரைப்பு


ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும் உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்புக்கு அத்திவாரமாய் அமையும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற் கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் புதுடில்லியில் இடம் பெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளையின் மாநாட்டில் கலந்து கொண்டனர், அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ஒரு அடிப்படைத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது ஈழத்தமிழினம் 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரீதியாகவும் போராடுகின்ற இனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.

எமது மக்களுடைய உரிமை சார்ந்த போராட்டங்கள் ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது எமது மக்கள் தாயகத்தில் பலம் மிக்க ஒரு சக்தியாக இருந்தார்கள்.

இலங்கைத் தீவைப் பொறுத்த வரையில் 65 சதவீதம் கடற்பரப்பையும் கடல் சார்ந்த நிலத்தையும் கொண்ட எமது தாயகம் எமது கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் போன்று இருந்தது.

அந்தக் காலத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியமான பகுதியாகிய எமது தாயகப் பகுதி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஓர் இரும்புச் சுவராகவே இருந்தது.

ஆயுதப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எமது பலத்தை எமது தாயக மண்ணில் இழந்து நிற்கின்றோம்.

உண்மையாக இலங்கை அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தை மிக இலகுவாக ஏமாற்றி வருகின்றது.

இன்று தமிழர்களின் வல்லாதிக்கப் பூமி வல்லரசுகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிகப் பாதகமான விடயமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார்.