இந்தியாவின் வரலாற்று துரோகம்..!ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கித் தருவோம் என கூறிய இந்திய வல்லரசு கடந்த காலத்தில் எமது மண்ணுக்கு வந்து தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாது மிகப்பெரும் துரோகங்களை தவறுகளை செய்துள்ளது.

அந்த துரோகங்கள், தவறுகளுக்கு இந்தியா பிராயசித்தம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாயை நினைவு கூருவது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்கு கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல. மாறாக போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து நினைவு நிகழ்வை முன்னெடுக்கின்றோம்.

ஆனால் வெறுமனவே விளக்கேற்றி மௌனமாக செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். இந்தியா செய்த வரலாற்று துரோகத்தையும் இலங்கை அரசு செய்த வரலாற்று துரோகத்தையும் கொடுமைகளையும் மறைப்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது.

அதேபோல கடந்த காலத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டது ஏன் என்றால் திலீபனை சாகடித்ததில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது அது மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

எனவே உண்மையில் இந்த நினைவேந்தல் ஊடாக இளம் தலைமுறைக்கு இந்த வரலாற்றுபணியை கொண்டு செல்கின்றோம். ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனி நாடு உருவாக்கித் தருவோம் என்று இந்திய வல்லரசு கூறியது.

ஆனால் இந்திய அரசு எமது மண்ணுக்கு வந்து உரிமைகளை பெற்றுத்தராதது மட்டுமல்ல எங்கள் மீது கொடுமைகளை அறங்கேற்றியிருக்கின்றது.

அன்னை பூபதியம்மா உயிர்நீத்து 35 வருடங்கள் சென்றும் இன்று கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையாக இருக்கின்ற ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தசட்டத்தை ஏற்கவேண்டும் என தமிழ் மக்களின் தலைமைகளை கொண்டே பேசவைக்கின்ற ஒரு துயரமான நிலைமை உள்ளது.

இந்த உண்மைகளை எங்கள் மக்களும் இளம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.