தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய 988 கோடியே 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தனஃ
அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தங்காலை பகுதியில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 'உனாகுருவே சாந்த' என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3 லொறிகளில் இருந்து நேற்று இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.