தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூலில் பௌத்த வரலாற்றுத் திணிப்பு- ஆபத்து என்று எச்சரிக்கை!

தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த வரலாறும் அதற்குரிய சிங்கள மொழிச் சொற்களும் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.இந்திரகுமார் தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் தம்மையா இராஜரட்ணம் தலைமையில் புதன்கிழமை மாலை 5.30க்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த வரலாற்றுத் திணிப்பு என்ற தலைப்பில் இந்திரகுமார் உரையாற்றினார்.

மேற்படி தலைப்பில் இடம்பெற்ற உரையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,   

தரம் ஆறில் இருந்து தரம் பத்து வரையும் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத் தாழ்களிலும் பௌத்த வரலாற்றுத் திணிப்புகள் உண்டு.

ஈழத்தமிழர்களின் வரலாறுகள், மரபுகள், பண்பாடுகள் பாடநூல்களில் திட்டமிடப்பட்டு மூடி மறைக்கப்பட்டுத் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகள் மாத்திரம் பாடநூல்களில் புகுத்தப்பட்டுள்ளன.

இதனால் தமிழ் மாணவர்கள் பிழையான வரலாறுகளைக் கற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் பௌத்த வரலாறுகளில் உள்ள சிங்களச் சொற்கள் அப்படியே தமிழ் மொழியில் பிரயோகிக்கப்படுவதாகவும், ஊர்காவற்துறை, கந்தரோடை போன்ற யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பெயர்கள்கூட சிங்கள மொழி உச்சரிப்புடனேயே பாடநூல்களில் பதிவிடப்பட்டிருக்கின்றன.

சிங்களச் சொற்கள், சிங்கள வரலாறுகள் அதிகமாகவுள்ளதால் தமிழ் மாணவர்கள் அவற்றைக் கற்பதற்குக் சிரமப்படுவதாகவும் வரலாற்றுப் பாடத்தில் சித்தியடையும் மாணவர்களின் விகிதாசாரம் ஆண்டுதோறும் குறைவடைந்து வருவதாகவும் கூட்டிக்காட்டியதுடன், 2023 ஆம் ஆண்டு மாறவுள்ள புதிய பாடநூலில் மேலும் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளே வரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் இன்னுமொரு மொழியில் எழுதப்பட்ட வரலாற்றுப் பாடநூல்களை மற்றுமொரு மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது. இது சர்வதேச நியமம் என்றும் இந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த இலங்கைத் தேசிய கல்வி நிறுவாகத்தின் பணிப்பாளராக இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர், இந்த ஆபத்து மேலும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியைக் கூட சிங்களத்தில் இருப்பது போன்று மாற்றியமைக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் திட்மிட்டே அவற்றை மும்மாழிகளிலும் ஒரேமாத்திரியான பாடங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மொழிக்குத் தனித்துவமான பண்புகள் இருப்பதை நிராகரிப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

வரலாற்றைக் கற்பிக்கும் தமிழ் மொழி மூல ஆசிரியர்கள், ஒன்றுசேர்ந்து மூடிமறைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் பாடநூலைக் கற்பிக்கமாட்டோம் என்று எதிர்ப்பு வெளியிட்டால், நிச்சியமாக அரசாங்கம் பாடநூலை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் அவர் எடுத்துக் காட்டினார்.

உதாரணமாக, குறித்த தரத்துக்கான இஸ்லாமிய பாடநூல் ஒன்றை ஆசரியர்கள் ஒன்றிணைத்து தவிர்த்தபோது, அது முற்று முழுதைாக மாற்றப்பட்டு மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வரலாறுப் பாடநூலில் மாத்திரமல்ல ஏனைய தமிழ் மொழிபாடநூல்களிலும் தமிழ் பிழைகள் சிங்கள மொழி பெயர்ப்புகள் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டதுடன் இந்த வரலாற்றுத் திணப்புகள் நிறுத்தப்பட்டு தமிழர்களின் வரலாறுகள், பண்பாடுகள் பாடநூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.