வடக்கில் விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் இந்து ஆலயங்கள் சட்டவிரோதம்!



தனது கருத்துக்களின் மூலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களிற்கு எதிரான வன்மத்தை கக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ஒருவர் சரத் வீரசேகர.

தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறிய இன, மத ரீதியாக பிரச்சனைகளில் சரத் வீரசேகர வெளியிட்ட பல கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தளவிற்கு தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்க எண்ணுகின்ற முற்போக்கான சிந்தனைகளை கொண்ட இவர், தற்போது சொன்ன விடயம் ஒன்று மீண்டும் தமிழ் மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது.

அதாவது "வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே" எனக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம், தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பிலும், அங்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் தொடர்பிலும் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

"இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

தமிழர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட இலங்கையில் உள்ள எல்லா இடங்களிலும் சிறிய மற்றும் பெரிய ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள்.

அதேபோல இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பௌத்தர்கள் வாழ்வதற்கு, தமது வழிபாட்டிற்கு விகாரைகளை அமைப்பதற்கு முழு உரிமை உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என சொல்வதற்கும், அவர்கள் தமது வழிபாடுகளை செய்யக் கூடாது என சொல்வதற்கும் எந்தவொரு சட்டமும் இல்லை.

வடக்கில் பௌத்தர்கள் வாழ்கின்றார்கள், இராணுவத்தினர் இருக்கின்றார்கள், ஆகவே அவர்கள் வழிபட விகாரைகள் அமைப்பது சட்டவிரோதம் இல்லை.

வடக்கில் உள்ள விகாரைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டமை என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவை."

இவ்வாறு சரத் வீரசேகர தெரிவித்த கருத்தானது, வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் இன, மத ரீதியான பிரச்சனைகள் வலுப்பதற்கு தூண்டுதலை ஏற்படுத்துகிறது.