நான் ரணில் ராஜபக்ச அல்ல! அனைத்துக் கட்சிகளும் பச்சைக் கொடி காட்டினால் தீர்வு


வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த அதிபர், தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ஷ அல்ல என்றும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.