பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம்!

பிரித்தானியாவில் இந்த மாதம் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19ஆம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சர்வதேச நிபுணர் குழுவொன்று ஆய்வு செய்தது.அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரித்தானியாவில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதலின் தற்போதைய நிலைகளில் கூட பிரித்தானியாவுக்கு கடந்த வார தீவிரத்தின் வெப்பம் மிகவும் அசாதாரணமானது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சி கூட்டாளரும் புதிய அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான மரியம் சகரியா கூறினார்.கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட பகல்நேர அதிகபட்சத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் எந்த வருடத்திலும் 1,000 இல் 1-ஆக இருந்தது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20ஆம் திகதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரித்தானியாவில் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.கடந்த வாரம் பிரித்தானியாவில் பதிவான வெப்பம் 104.5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமான வெப்பத்தை கொண்டு வந்தது. சுட்டெரிக்கும் கோடையில் பழக்கமில்லாத ஒரு நாட்டில், இந்த வெப்ப அலை மனிதர்களை நிலைக்குலைய வைத்தது.