கனடாவில் சிறுவர் காப்பகத்தில் கோர சம்பவம் - பிரதமர் வெளியிட்ட இரங்கல்


கனடாவில் பகல்நேர சிறார் காப்பகத்தின் மீது பேருந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை பகல் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் லாவல், மாண்ட்ரீல் பகுதியில் குறித்த பேருந்து விபத்து நேர்ந்துள்ளது.

காப்பகம் மீது பேருந்து மோதிய நிலையில் பல சிறார்கள் அந்த பேருந்துக்கு அடியில் சிக்கிகொண்டனர். இந்த விவகாரம் தொடர்பில் மாண்ட்ரீல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

காயமடைந்த ஆறு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளனர் என்றார். விபத்து தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டதும் தொடர்புடைய சிறார்களின் பெற்றோர்களும் காப்பகத்தில் உடனடியாக வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 51 வயதான அந்த பேருந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அவர் மீது படுகொலை மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் சிறார் காப்பகம் ஒன்றில் நகரின் பொது போக்குவரத்து சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிவரும் Pierre Ny இதுவரை எந்த விபத்திலும் சிக்கியதாக தகவல் இல்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விரிவான விசாரணை இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிடுகையில், இதயம் கனக்கிறது, பெற்றோர்கள், சிறார்கள் ஊழியர்களின் வலியை துயரத்தை வெறும் வார்த்தைகளால் நீக்கிவிட முடியாது, ஆனால் உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.