அரசாங்கத்துக்கு எதிரான முகப்புத்தக பதிவு - இலங்கையில் 20 வருட சிறை..!


அரசங்கத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவது பயங்கரவாத செயற்பாடு, அவ்வாறு பதிவிட்டால் 20 வருடகால சிறைத்தண்டனை. இப்படிப்பட்ட அரசின் பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்யவேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் உறுப்பினரான சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டமூலம் நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முழுமையாக இல்லாதொழிக்கக்கூடியது.

சிவில் அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த சட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலானது எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இல்லாத நாட்டில் கடுமையான சரத்துக்களை உள்ளடக்கிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை கொண்டு வர அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

சாதாரண தண்டனை சட்டகோவை யின் பிரகாரம் தண்டனை வழங்க கூடிய குற்றங்கள் கூட இந்தச் சட்டத்தில் பயங்கரவாத செயற்பாடாக மாற்றப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காகவே பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.

அதனை விடுத்து இந்த சட்டத்தில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான எதுவும் கிடையாது. குறிப்பாக இந்த சட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல. ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.