சின்வாரின் மரணத்தை அடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சின்வாரின் மரணம் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை மீட்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முன்மொழிவுகளை ஆரம்பிக்க அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதான இடையூறாக சின்வார் இருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் தொடர்ந்து 101 பணயக்கைதிகள் எஞ்சி இருப்பதாக நம்பப்படும் நிலையில் அவர்களின் உறவினர்கள் கடந்த வியாழக்கிழமை இரவும் டெல் அவிவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடந்த ஓர் ஆண்டாக இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கடந்த இரு வாரங்களாக வடக்கு காசாவை முற்றுகை செய்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம் கடந்த வியாழன் இரவு தொடக்கம் நடத்திய கடுமையான தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,500ஐ நெருங்கி இருப்பதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம் ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதரகம் சின்வாரை ‘உயிர் தியாகி’ என்று குறிப்பிட்டுள்ளது. ‘போர் உடையில், திறந்த வெளியில், மறைவிடத்தில் அன்றி, எதிரியை எதிர்கொண்டு, போர்க்களத்தில் நிற்கும் தியாகி சின்வாரை முஸ்லிம்கள் பார்க்கும்போது எதிர்ப்புப் போராட்ட உணர்வு வலுப்பெறும்’ என்று தூதரகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பும், ‘இஸ்ரேலுடன் புதிய மற்றும் தீவிர மோதல்’ ஒன்றுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது.
லெபனானிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வருகிறது. இந்த மோதல்களில் ஐந்து இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இராணுவ அதிகாரி ஒருவரும் உள்ளார்.