ஹோட்டல் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: அவுஸ்திரேலியாவில் பரபரப்பு


அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் ஒன்று ஹோட்டல் மேல் தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வடக்கு அவுஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரை தளத்தின் மீதே ஹெலிகொப்டர்  விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டர் விமானி உயிரிழந்த நிலையில், ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள்  பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
 
இரட்டை எஞ்சின்களை கொண்ட குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து  திங்கட்கிழமை காலை 2 மணிக்கு அவசர கால குழுவினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
 
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், விமானியை முறைப்படி அடையாளப்படுத்துவதற்கான தடயவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இந்த விபத்தின் போது  தரையில் இருந்த எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.