யாழப்பாணம் மூளாய் மாவடி வீதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை மூளாய்ப் பகுதியில் இரு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட தர்க்கம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் வரை சென்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பிரச்சினை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தலைதூக்கிய நிலையில் இரு குழுக்களின் பிரச்சினையாக உருவெடுத்து இரு குழுவினர் கடும் மோத லில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவத்தால் இந்த பகுதி வீதியால் சென்றவர்கள் மீதும் நேற்றுக் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளொன்றும் முற்றாகத் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடம் மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய விரைந்து சென்ற பொலிஸார் மோதல் நிலையைக் கட்டுப்படுத்த முயன்ற போது ஒரு குழுவினர் பொலிஸார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் நேற்று மாலை வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தலைமைறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவர்களைக் கைது செய்வதற்குநடவடிக்கை எடுத்துள்ளதுடன் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, தொடர்ந்தும் பதற்றம்நிலவுவதால் அங்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.