குவியல் குவியலாக மீட்கப்படும் உடல்கள் - மியன்மாரில் தொடரும் சோகம்


மியன்மாரை கடந்த வெள்ளிக்கிழமை ரிச்டர் அளவில் 7.7 ஆக உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது.

458 பேர் காயம் அடைந்துள்ளனர். 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மியன்மாரில்  கடந்த 28 திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.


கட்டட இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உட்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன (China) மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டது. அத்துடன் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 26 வயதுடைய ஒருவரை உயிருடன் மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிக்கிய குடும்பத்தினரின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளியில், 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், காயமடைந்த அவர்களின் பாட்டியும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் காணொளி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.


இவர்கள் நிலநடுக்க அதிர்வுகளின் போது அவசரப் படிக்கட்டுகளுக்கு விரைந்த போது, திடீரென இடிந்த கட்டிடத்தின் சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்க கூடுதல் உபகரணங்கள் தேவைப்படும் நிலையில், அதிகாரிகள் அவர்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நிலநடுக்க பாதிப்புக்கள் காரணமாக உயிரிழந்த 3,000 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 4,500 போ் காயமடைந்துள்ளதோடு 441 பேரைக் காணவில்லை எனவும், காணாமல் போனவர்களில், பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது .

இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கனரக இயந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மியன்மாரில் நிலநடுக்கத்தால் நீர் விநியோகம், சுகாதார உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவாசத் தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

--