வடக்கு கிழக்கில் பொதுமுடக்கப் போராட்டம் : இன்றைய நிலவரம்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (20) நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம்

அந்தவகையில், யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.

தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மட்டுமே ஆங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.


வவுனியா

வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது.

இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர். மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி,செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன்,வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொது முடக்கப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் மக்களும், முஸ்லிம்மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவைவழங்கி வருகின்றனர்.


முல்லைத்தீவு

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பொது முடக்கப் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் எவையும் இடம் பெறவில்லை.

அரச பேருந்துகள் சேவையினை வழங்கி வந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதேபோன்று, அரச திணைக்களங்கள் தவிர ஏனைய அலுவலகங்கள் அனைத்தும் இயங்காத நிலைமையில் காணப்பட்டது. பாடசாலைகளில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான வீதிகள் உள்ளூர் வீதிகளில் மக்களின் நடவடிக்கைகள் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் என்பன வழமை போன்ற காட்சியளிக்கின்றது.

அதேபோன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறுந்தூர பேருந்து சேவைகள் அரச பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பரந்தன் பகுதியில் வர்த்தக நிலையங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

கிளிநொச்சி சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கி காணப்பட்ட போதும் சேவைச் சந்தைக்கு முன்பாக மரக்கறி வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


திருகோணமலை

திருகோணமலை நகர் பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதுடன் மாணவர்களை பெற்றோர்கள் வந்நு அழைத்து செல்கின்றனர்.

இருந்த போதிலும் ஒரு சில கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் இயங்கி வருவதுடன் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

பொதுப் போக்குவரத்து வழமை போன்று இடம் பெற்றாலும் குறைவானவர்களே பயணத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது.


மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள பிரபல பொதுச்சந்தை மற்றும் அதனோடிணைந்த அனைத்து வர்த்தக நிலையங்களும், முற்றாக இயங்காமல் மூடப்பட்டுள்ளன.

பிரதான வீதிகளில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள், தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடைகள், சுப்பர் மார்க்கெட், உள்ளிட்ட அனைத்தும் இயங்கவில்லை. எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்களும், வங்கிகளும், திறக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு மக்கள் சேவைகளைப் பெறுவதங்குச் செல்வது மிக மிக குறைவாகவே காணப்படுகின்றன.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா கதுருவெல போன்ற தூர இடங்களுக்கான ஒருசில தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

தற்போது பாடசாலை மட்ட தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதனால் மாணவர்களும், ஆசிரியர்களும், பாடசாலைகளுக்குச் சென்றுள்ளதோடு, அரச திணைக்களங்களுக்கும் உத்தியோகஸ்தர்கள் கடமைகளுக்குச் சென்றுள்ளதையும் அவதானிக்கின்ற இந்நிலையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அரச திணைக்களங்களுக்குச் செல்வது மிக குறைவாகவே காணப்படுகின்றன.

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைச் செயற்பாடுகள் வழமைபோன்று இயங்கிவருவதுடன், தமது தேவைகளின் நிமிர்த்தம் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும், ஒரு சில பொதுமக்களும் நடமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.


அம்பாறை

அம்பாறை மாவட்ட மக்கள் நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டத்தினை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று காவல்துறையினருடன் இணைந்து இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

கல்முனை பொதுச்சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , மருந்தகங்கள், வங்கிகள் , எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றன.


மன்னார்

மன்னார் மாவட்டத்தில் பொதுமுடக்க போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், கடற்றொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்றதோடு பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் வழமை போல் இடம்பெற்றன. மன்னார் நீதிமன்ற செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.