நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய  அவர்,

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டணத்தை  அதிகரித்தமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரச நிதி தொடர்பான குழுவுக்கு உரிய தரப்பினர்கள் அழைக்கப்பட்டார்கள் ஆனால் அவர்கள் குழுவுக்கு முன்னிலையாகவில்லை.

அதன் பின்னர் குழுவின் தலைவர் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
விசா  விவகாரத்தை மூடி மறைக்க குழுவின் தலைவர்  முயற்சிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

 எவ்வாறு இவ்வாறு செயற்பட முடியும். விசா விவகாரம் தொடர்பில் விளக்கம் கோருவதற்கு உரிய  தரப்பினரை குழுவுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் வருகை தரவில்லை.

இவ்வாறான பின்னணியில் இந்த விடயத்தை  தற்போது என் பக்கம் திருப்புவதற்கு  நடவடிக்கைககள் எடுக்கப்படுகிறது. என்னை இலக்காகக் கொண்டு தாக்குகிறார்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

நாடு வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர்  பாரிய இழுத்தடிப்புக்கு பின்னர் அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா மீண்டும்  நியமிக்கப்பட்டார்.விசா விவகாரம் தொடர்பில் குழுவின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளும் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இவரை அச்சுறுத்தியுள்ளார்கள்.இதனை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை காட்டிலும்,பன்மடங்கு மோசடி புதிய விசா முறைமையில் இடம்பெறுகிறது.இதுவே உண்மை .ஆகவே அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்த்துக் கொள்ள சொல்லுங்கள் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமைத் தாங்கிய  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கவில்லை. ஹர்ஷ, யார் உங்களுக்கு  அச்சுறுத்தல் விடுத்தது என கேட்டார்.

இதன்போது  எழுந்து பதிலளித்த ஹர்ஷ டி சில்வா,

நடந்தவற்றை நான் உங்களிடம் குறிப்பிட்டுள்ளேன்.அரசாங்க நிதி தொடர்பான குழுவில் நான் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்.

விசா விவகாரத்தின் பின்னணியில் பலமான சக்தி உள்ளது.எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எதுவும் நடக்கலாம் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

ஹர்ஷ , உங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தது யார் என்று தெளிவாக குறிப்பிடுங்கள் உரிய நடவடிக்கைகளை நான் முன்னெடுக்கிறேன் என்றார்.