கதிகலங்க வைக்கும் ஹமாஸின் அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பணயக் கைதிகளின் நிலைமை

நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் ஒருவரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்தவர்களை பணயக் கைதிகளை பிடித்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் அமைப்பினருடன் போர் புரிந்து வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறி விட்டதாக தெரிவித்து போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறி மீண்டும் போர் ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேடா(Abu Obeida) தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவித்த தகவலில், பிணைக் கைதிகள் பரிமாற்றம், பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பாளர் கோரிக்கை ஆகியவை நிறைவேற்றப்படாமல், பாசிச எதிரி மற்றும் அதன் திமிரு பிடித்த தலைமை அத்துடன் அதன் ஆதரவாளர்கள் யாரும் பணயக் கைதிகளை உயிருடன் வெளியேற்றி கொண்டு செல்ல முடியாது என எச்சரித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும், ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமது எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே எதிரி முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாகவும், தங்களுடைய நிலத்திற்காக புனித போர் தாக்குதலை நடத்தி வருவதாகவும் ஒபேடா தெரிவித்துள்ளார்.