போர் நிறுத்தத்திற்கு புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது ஹமாஸ்

காசாவில் போர் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய முன்மொழிவை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.

காசாவில் இடைவிடாது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,500ஐ நெருங்கி இருப்பதோடு மேலும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கும் 100 பலஸ்தீன கைதிகளுக்கு இணையாகஇஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 700–1000 பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு இணையாக ஆரம்பத்தில் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயுற்ற இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பெண் வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.

மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் முன்வைத்திருக்கும் புதிய போர் நிறுத்த முன்மொழிவு தொடர்ந்து ‘யதார்த்தமற்ற கோரிக்கைகளை’ அடிப்படையாகக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பிலான விடயம் போர் அமைச்சரவைக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சரவைக்கு நேற்று கையளிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான வேறுபாடுகளை கலையும் முயற்சியில் மத்தியஸ்தத்தில் எகிப்து மற்றும் கட்டார் ஈடுபட்டு வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அந்தப் பகுதிக்கு உதவிகளை விரைவுபடுத்துவதற்கும், தெற்கு மற்றும் மத்திய காசாவில் இடம்பெயர்ந்திருக்கும் பலஸ்தீனர்களை வடக்கிற்கு செல்வதற்கு அனுமதிப்பதற்கும் எகிப்து முயற்சித்து வருகிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் பெரும் அளவான உதவிகளை வழங்க முடியும்’ என்று எகிப்து பொலிஸ் கல்லூரியில் பேசிய சிசி கூறினார்.

எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபா பகுதி மீது இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் போர் நடவடிக்கையின் ஆபத்துக் குறித்து சிசி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்தார்.

ராபவில் இருக்கும் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க அங்கு படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது குறித்து நெதன்யாகு கடந்த பெப்ரவரியில் குறிப்பிட்டிருந்தார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான தாக்குதல் பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவில் கவலை வெளியிடப்பட்டு வருகிறது.

காசாவில் இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத பகுதியாக ரபா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்து அங்குள்ள இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு, தெற்கில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கும் வகையில் ஹமாஸ் முன்னதாக போர் நிறுத்தம் முன்மொழிவுகளை செய்தது. எனினும் நெதன்யாகு அதனை நிராகரித்ததன் காரணமாகவே கடந்த சில வாரங்களில் போர் நிறுத்தம் ஒன்றை எட்ட முடியாமல் போயிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பரிந்துரை கடந்த பெப்ரவரியில் பாரிஸ் பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஹமாஸ் முழுமையாக உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவிலும் கூட, கைதிகள் பரிமாற்றத்திற்குப் பின்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான திகதிக்கு இணக்கம் எட்டப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் காலக்கெடுவையும் அது கோரியுள்ளது.