யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் நடவடிக்கை

இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, மூன்று கட்டங்களாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று ஹமாஸ் வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இது காசா மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றன. .

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட கட்டார் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டுவர கட்டார், அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டும், இரு தரப்பும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டுவந்தது.

முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சார்பில் மத்தியஸ்தம் செய்யும் வகையில், கட்டார், எகிப்து நாடுகள் நேரடியாக ஹமாஸ் அமைப்பினரை சந்தித்து பேசி வந்தனர்.

அந்த வகையில், கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் சில விடயங்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டன.

 அதோடு, நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் எண்டனி பிளிங்கன், போர் குறித்து முக்கியமான விடயங்களை கலந்துரையாடினார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ள பதிலில், ‘மூன்று கட்டங்களாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம்’ என்று முன்மொழிந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர 135 நாட்களுக்கு, 3 கட்டமாக போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹமாஸ் முன்மொழிந்துள்ளது.

அதுவும் 45 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

 முதல் கட்டத்தில், இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 1,500 பாலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலாக காசாவில் உள்ள பெண் பிணையக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் விடுவிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் மிஞ்சியிருக்கும் ஆண் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மூன்றாம் கட்டத்திலும் பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் இறுதியில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இஸ்ரேல் படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும். இறந்தவர்களின் உடல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்நிறுத்தத்தின் போது, இஸ்ரேலியப் படைகள் முற்றிலுமாக வெளியேறும் நிலையில் காசாவின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலால் காசாவின் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து பற்றாக்குறைக்குயால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.