காசா போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு அந்த திட்டத்தை சாதக போக்குடன் கையாள்வதாக தெரிவித்துள்ளது.
பல மாதங்களாக இழுபறியுடன் நீடித்து வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில், ஹமாஸ் அமைப்பு முதல் முறை நம்பிக்கையை காண்பிக்கும் சமிக்ஞையை வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு தெற்கு நகரான ரபாவில் நேற்று (03) வான் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக விரைவில் பிரதிநிதிகளை அனுப்பப்போவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார். ‘எமது மக்களின் கோரிக்கைகளை உண்மையாக்கும் உடன்படிக்கை ஒன்றுக்காக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான ஹனியே, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அதில் சாதகமான போக்குடன் இஸ்ரேலின் புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.
காசாவில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் இஸ்ரேலின் முன்மொழிவு தமக்கு கிடைத்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை கூறி இருந்தது. தொடர்ந்து கடந்த புதன்கிழமை இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்த போர் நிறுத்த திட்டத்தை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி இருந்தார்.
எனினும் காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறும் நிலைப்பாட்டில் ஹமாஸ் உறுதியாக இருப்பதோடு அதனை நிராகரிக்கும் இஸ்ரேல் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயற்சிக்கும் சூழலில் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.