மறைந்திருந்து தாக்கும் ஹமாஸ் : புதிய உத்தியை கையாளுவதாக அமெரிக்கா தகவல்ஹமாஸ் அமைப்பு தாக்கிவிட்டு மறைந்து செல்லும் உத்தியை கையாண்டு வரும் நிலையில் அங்கு தமது நிலையை தக்கவைப்பதில் இஸ்ரேல் இராணுவம் சிரமத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

காசா போருக்கு முன்னர் 20,000 தொடக்கம் 25,000 இருந்த ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை தற்போது 9,000 மற்றும் 12,000 இற்கு இடையே குறைந்திருப்பதாக அமெரிக்க தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் அந்தப் போராளிகள் தற்போது இஸ்ரேலிய படைகள் மீது திடீர் தாக்குதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குண்டுகளை வீசி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறான உத்தி சுரங்கப்பாதைகள் வழியாக காசாவுக்கு வரும் ஆயுதங்கள் மற்றும் வெடிக்காத ஆயுதங்களை மீள பயன்படுத்தல் அல்லது இஸ்ரேலிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு ஹமாஸ{க்கு தமது போர் நடவடிக்கையை மேலும் பல மாதங்களுக்கு நீடிக்க உதவுகிறது என பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பின்னர் அந்த இடத்தில் இருந்து உடன் பின்வாங்குவது, மறைந்து கொள்வது, மீண்டும் ஒருங்கிணைவது மற்றும் குறித்த பகுதியில் இருந்து போராளிகளை அகற்றியதாக இஸ்ரேல் நம்பும் பகுதியில் மீண்டும் ஒன்று திரளும் திறனை பலஸ்தீன போராளிகள் வெளியிட்டு வருவதாக அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசா குடியிருப்பாளரான வசாம் இப்ராஹிமும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதி செய்தார். ‘தமது எல்லைக்குள் வரும் இஸ்ரேல் துருப்புகள் மீது உடன் தாக்குதல் தொடுக்கும் உத்தியில் இருந்து ஹமாஸ் விலகியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘அவர்களின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் படைகளை நிலைநிறுத்தும் வரை காத்திருந்துவிட்டு பின்னர் திடீர் தாக்குதல்களை நடத்துகின்றனர்’ என்றும் இப்ராஹிம் குறிப்பிட்டார்.