யாழில் இரண்டாயிரம் ஏக்கர் காணி அபகரிப்பா..!



யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் எந்தவொரு காணியையும் அபகரிக்கும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் தனது சமுக வலைத்தளமான முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அதிபர் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.