இலங்கையில் அரச வங்கிகளை விற்கும் அபாயம்! பொதுமக்கள் வைப்புத் தொகையை இழக்க நேரிடுமா..

  


தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக வங்கிக் கடன்களை குறைப்பு செய்தால், அரச வங்கிகளை விற்கும் அபாயம் ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினரான ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ  பீட பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

5 நாட்கள் விடுமுறை வழங்கி தேசிய கடனை குறைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசாங்கம் பொறுப்புக்கூறலைப் புறக்கணித்து நிதிச் சந்தை கட்டமைப்பில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றது. 

இது தொடர்பான திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.  இவ்வாறான நிலைமையில் இந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் பேரழிவை ஏற்படுத்தும். 

அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் விபரீதமான சூழ்நிலைகள் ஏற்படும் அபாயம் காணப்பட்டாலும்,  பொதுமக்கள் தமது வைப்புத் தொகையை இழக்க நேரிடும் என்ற தேவையற்ற அச்சத்தில் செயற்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அரசாங்கம் இந்த தருணத்தில் பொதுமக்களிடம் இருந்து இப்படி ஒரு தேவையற்ற அச்சம் ஏற்படுவதை எதிர்பார்க்கின்றதா என்று தெரியவில்லை. 

அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் குழப்பங்களை உருவாக்கி, ஸ்திரமின்மை ஏற்படுத்த  முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக வங்கிக் கடன்களை குறைப்பு செய்தால் அரச வங்கிகளை விற்கும் அபாயம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.