கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நெருக்கடி - மூன்று மணிநேரம் துருவி துருவி விசாரணை


2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அதிபர் மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிய போராட்டத்தின் போது அதிபர் மாளிகையில் காணப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் திங்கட்கிழமை முன்னாள் அதிபரின் இல்லத்திற்குச் சென்றதாக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.