வடக்கில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களில் 5,000இற்கும் மேற்பட்ட பொருட்கள் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை குற்றப் புலனாய்வுத் துறை நேற்று(02.09.2025) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளது.
அத்துடன், இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள தங்கப் பொருட்களை முறையாக எண்ணுவதற்காக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தின் அலுவலகம் தற்காலிகமாக குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மத்திய வங்கி நடவடிக்கை
ஆணையத்தின் உதவியுடன் தங்கப் பொருட்களின் எடை மற்றும் மதிப்பு ஆதாரமாகப் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த தங்கப் பொருட்கள் இராணுவத்தின் காவலில் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடளித்திருந்தார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தங்கப் பொருட்களை எண்ணி, அவற்றை காவலுக்கு மாற்ற இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.