காசா மருத்துவமனை தாக்குதல் : பரபரப்பு தகவலை வெளியிட்டது அமெரிக்கா


 

காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பளர் ஆட்ரின் வொட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"அமெரிக்க அரசு மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயற்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் இதனை உறுதி செய்துள்ளோம்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காசா மருத்துவமனை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர்.

 இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் வீசிய ரொக்கெட்டுகள் தவறுதலாக விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 இதற்கான வீடியோ ஆதாரங்களையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில், இஸ்ரேல் பொய் கூறுகின்றது என ஐநாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

 அவர் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில்,

 "இஸ்ரேல் பிரதமர் ஒரு பொய்யர். மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு இருப்பதாகக் கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக இஸ்ரேல் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அதன் நகல் எங்களிடம் உள்ளது.

 இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம். பொய் கதைகளை அவர்கள் புனைவதை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

 நேற்றைய நிலவரப்படி இஸ்ரேலின் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 200 பேர் பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.